Monday, September 5, 2022

அக்கினிச் சிறகுகள்






அக்கினிச் சிறகுகள் இதழ் - 23

நேர்காணல் வினாக்கொத்து

 

1.       உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?

நான் ஆர். எம். நௌஸாத்..கிழக்கு இலங்கையின் சாய்ந்தமருது என்ற ஊரில்

1960இல் பிறந்து வசிக்கின்றேன்.. தொழிலால், ஒரு அஞ்சல் அதிபர்..தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகிறேன்... தீரன் என்பது என் புனைபெயர்..

 

2.       உங்களது படைப்பிலக்கியப்பணிகள் என்னென்ன துறைகளில் இயக்கம் பெற்றுள்ளன...?

கவிதை, சிறுகதை, புதினம், இதழியல். நாடகம், பத்தி எழுத்து  என்று சுமார் 35 வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றேன்..

 

3.       வெளியீடுகள் பற்றிக் கூறுங்களேன் ...

 

1983 தொடக்கம் 1989 வரை  தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றேடு

ஒன்றினை 16 இதழ்கள் வெளியிட்டேன்.. மேலும், வல்லமை தாராயோ..

வெள்ளிவிரல், தீரதம்  ஆகிய மூன்று சிறுகதை நூல்களும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம், ஆகிய  மூன்று நாவல்களும்,

ஆழித்தாயே அழித்தாயே..., குறு நெல், அபாயா என் கறுப்பு வானம், முத்திரையிடப்பட்ட மது, என்னும் நான்கு சிறிய,பெரிய கவிதை நூல்களும் இதுவரை வெளிவந்துள்ளன...

 

4.       உங்கள் எழுத்தும் இலக்கியமும் எவற்றை நோக்கி பயணிக்கின்றன அல்லது எவை சார்ந்து செயற்படுகின்றன?

 

என்னுடைய தனிப்பட்ட எழுத்தாலும் இலக்கியத்தாலும் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழும் என்றெல்லாம்  என்னை நான் ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை.. ஆயின், உலகில், பல்வேறுபட்ட  எழுத்தால், இலக்கியத்தால், அவ்வாறு  ஏதும் சமுக மாற்றங்கள் ஏற்படுமிடத்து நாமும் ஓர் அணுவளவு பங்களிப்பை அதற்குச் செலுத்த முடியும் என்று நம்புகின்றேன்.. அதை நோக்கிப் பயணிக்கின்றேன்..

 

5.       தொழில் ரீதியாக ஒரு 'தபால் நிலைய அதிகாரி' என்ற வகையில் இலக்கிய ஈடுபாடு மற்றும் எழுத்தார்வம் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறானவை?

 

ஓர் அஞ்சல் அதிபருக்கு பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.. உதவிப்பணம் பெற வரிசையில் காத்திருக்கும் வயோதிபர்கள், நோயாளிகள், தொழில்வாய்ப்பு,கல்வி, காதல் கடிதங்களுக்கு வாசலில் காத்திருக்கும் இளைஞர்கள், அரச சுற்று நிருபங்களுக்குள் தம் வாழ்வை புதைத்துக் கொண்ட அரச அதிகாரிகள், வாக்காளர் அட்டை வாங்க விற்க வரும் அரசியல்வாதிகள்..வெளிநாட்டு,காசோலைக்கும் பணத்துக்கும் ஏங்கி நிற்கும் ஜீவன்கள், ... அப்பப்பா...ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் சிறுகதைகள்..கவிதைகள்....கருவுக்குப் பணமேயில்லாத கதைக்களங்கள்...

 

5. நவீன இலக்கியத்தில் 'நாவல் இலக்கிய வாசிப்பு' பற்றிய தங்களது சமூகம் சார்ந்த புரிதல் என்ன?

 

நாவல் இலக்கியம் தன் அந்திம காலத்தை எட்டி விட்டதாகவே எண்ணுகிறேன்.. நாவல் வாசிப்போரின் எண்ணிக்கை நன்றாக குறைந்து விட்டது.. நீண்ட நேர வாசிப்புக்கு இப்போது மனிதர் தயாராக இல்லை.. இது, “பாஸ்ட்பூட்காலம்...பத்து வரி வாசித்து விட்டு பறந்து போய் விடுகிறார்கள்..

 

6.       உங்கள் நூல்கள் பெற்றுள்ள விருதுகள் பரிசுகள் பற்றிய நூற்குறிப்புக்கள்?

 

2009 இல்,‘நட்டுமை நாவல் தமிழ்நாடு காலச்சுவடு சஞ்சிகை நடத்திய  ‘சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது 2014 இல், ‘வக்காத்துக்குளம் என்ற குறுநாவல் ‘அக்கினிக்குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

2011ல் ‘வெள்ளிவிரல் என்ற என் சிறுகதைத் தொகுதிக்கு, இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும், கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.

 மேலும் பல சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்கள் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளன ..

 

7.       'கலை இலக்கிய வாசிப்பும் சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார எழுச்சியின் மீள்வாசிப்பும்' குறித்த உங்களது அவதானங்கள் எவை?

 

முன்னர் நான் சொல்லியபடி, 'கலை இலக்கிய வாசிப்பால் சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார எழுச்சி என்பதெல்லாம் உடனடிச் சாத்தியங்கள் அல்ல,,நமது பணிகளை நாம் செய்து கொண்டே போவோம்.. மாற்றங்கள் அது பாட்டில் மாறிக்கொண்டே வரும்.. ஒரு பொறி ஒரு வனத்தைக் கொளுத்தும். ஒரு சொட்டு நீர் ஒரு காட்டை விதைக்கும்...

 

8.       அக்கினிச் சிறகுகள் சஞ்சிகை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து நீங்கள் கூற நினைப்பது?

 

அக்கினிச் சிறகுகள் அழகான சொல்.. மிகச் சமீபத்தில்தான் அக்கினிச் சிறகுகளின் தளத்தைப் பார்வையிட்டேன்.. மிக வியப்படைந்தேன் .. கலை இலக்கிய செயற்பாடுகளில் இவர்களின் தேடலும், கூர்மைமிக்க பார்வையும் கண்டு அதிசயித்தேன்.. இது புதிய இளைஞர்களின் தளம்.. அக்கினிச் சிறகுகள் அகல விரித்து மேலும் உயர்ந்து ஆகாய எல்லை தொட ஆசிக்கின்றேன்..