Tuesday, March 1, 2022

வனம்’-(மின்னிதழ்)

 

 வனம்-(மின்னிதழ்) -எழுத்துக்களை பேசுதல் --- February 12, 2022


‘..........நான் யதார்த்தத்தினையே எழுதுகிறேன் ...

  

கிழக்கிலங்கையின் மண்வாசனை அமைப்பியலினையும் நிலவரசியல் தொடர்பாடலினையும் படைப்புக்களின் ஊசலாட்டத்தில் சாமர்த்தியமாகக் கடத்தியவர் தீரன் ஆர். எம். நௌஷாத்.

நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம்- இவரது நாவல்கள். வெள்ளி விரல், தீரதம் சிறுகதை தொகுப்புகள்.நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் சுந்தர ராமசாமி- 75’ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது.

நிலஉடமைகளை அடிப்படையாகக் கொண்ட மண்னையும் மக்களையும் பாத்திரங்களாகக் கொண்டு அதற்கான தூல வடிவத்தினை கதை நகர்த்தலின் யுக்திகளாக செதுக்கிய தீரனின் மொழியுலகம் அலாதியானது.தனக்கான தனித்துவ பாணியினை தீரன் எப்போதுமே தழுவியிருந்தார். பாமரர்களின் அன்றாடச் சொற்களிலிருந்து காவியத்தன்மையினை கண்டடையும் கதை சொல்லல் போக்கும், மறைந்து விடாத காதலின் சூடும் தீரனின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன.

கொந்தழிப்பு நிறைந்த பெண் பார்வையினை அசால்டாக கடந்து செல்லும் தீரனின் கதைகளில் நிரம்பி வழியும் பாலியல் பஸ்மங்கள் ரசமானவை. அதனைச் சொல்வதற்கென்றே தீரன் தனியாக மொழியினை வடிவமைத்திருக்கிறார். அம்மாதிரியான மொழி தீரனுக்கு வாய்த்திருக்கிறது என்றே கூற வேண்டியிருக்கிறது.

 தீரனின் கதைகளில் உலாவித்திரியும் மாந்தர்களும் அவர்களின் பண்பாட்டு அரசியலும் கொல்வதெழுதுதல் 90ல் வெளிப்பட்ட விதமும் இலங்கையில் உருப்பெற்ற பெரும் அரசியல் செயற்பாட்டொன்றின் ஆவணப்படுத்தல்களாகும்.

 வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருது பெற்றது. கொல்வதெழுதுதல் 90’ காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது. 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ். பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் வக்காத்துக்குளம்நாவல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் காகித உறவுகள்எனும் வானொலி நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது.

 நல்லதொரு துரோகம்என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. சாகும்-தலம் சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தாய் மொழி சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.

 000

 

கேள்வி: படைப்பிலக்கியங்கள் எழுதப்படுவதில் அரசியலிருக்கிறது எனும் வகைப்பாட்டினூடாக உங்களது கொல்வதெழுதுதல் 90’ நாவல் முஸ்லிம் அடையாள அரசியலை வெளிப்படையாக பேச முயன்றிருக்கிறது. இவ்வகையில் இப்பிரதியின் உள்ளே பண்பாட்டு கதையாடல்களையும் அரசியலினையும் எம்மாதிரியாக புகுத்துனீர்கள்?

 பதில்: கொல்வதெழுதுதல் 90 ஆரம்ப காலத்தில் பள்ளி முனை கிராமத்தின் கதையாக முஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்தது. இத்தருணத்தில்தான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியம் எங்களூரில் பரவத் தொடங்கியது. இதன்போது எம்மூரவர்களின் அரசியல் மயமாக்க ஏற்பாடுகள் மிக வேகமாக அதிகரித்தன. இதன்படி ஊரில் உள்ள பெரும்பாலானோர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இம்மாதிரியான இணைவுகள் பதவியினதும், கௌரவத்தினதும் அடிப்படையில் சாதாரணமாக செயற்பட்டுக் கொண்டிருந்த மனிதர்களை சமூக அந்தஸ்த்து பெற்றவர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. இதிலிருந்துதான் முத்து முகம்மது உருவாகிறான். முஸ்லிம் காங்கிரஸ் எப்படி முத்து முகம்மதுவை அரசியல் நிலைப்பாட்டில் மாற்றுலகத்தினை அமைத்து உயரிய இடத்திற்கு மாற்றியமைத்தது என்பதையே கொல்வதெழுதுதல் 90 பேசியது.

 

கேள்வி: பள்ளி முனை கிராமத்தின் கதை ஏன் கொல்வதெழுதுதல் 90 ஆக மாறியது?

  பதில்: எனது நட்டுமை காலச்சுவடு வெளியீடாக வந்தது. இதிலிருந்து பல வருடங்களின் பின்னர், வேறு ஏதாவது படைப்புகள் எழுதப்பட்டிருக்கிறதா என காலச்சுவடு என்னிடம் கேட்டிருந்தது.ஏற்கனவே சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதைவெளிவந்திருக்கின்ற தருணத்தில் எனது பள்ளி முனை கிராமத்தின் கதை என்கின்ற பெயரும் ஒரே மாதிரியான தோற்றப் பொலிவினைத் தருவதாக கூறப்பட்டது. இப்படியிருக்கையில் ஒரு நாள் எனது மகள் தனது பாடசாலை கையெழுத்து பிரதியொன்றினை என்னிடம் காட்ட முனைந்தாள். அதில் சொல்வதெழுதுதலில் எனக்கு 90 புள்ளிகள் என காட்டினாள். அவளால் எழுதப்பட்ட சொல்வதெழுதுதல் எனும் வசனம் எனக்கு கொல்வதெழுதுதலாகப் பட்டது. அதனுடன் 90 சேர்ந்திருப்பதால் முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டு காலப் பகுதியான 1990கள் பொருத்தமாக அமைந்து விட்டன. இதுவே கொல்வதெழுதுதல் 90ஆக வெளிவந்தது.

 

கேள்வி: வயல் நிலவுடைமை சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்த பல கோணங்களை நட்டுமை நாவல் பேசுகிறது. கிழக்கிலங்கையின் மாற்றொரு இலக்கிய முகமாகவும் இருக்கிறது. நட்டுமையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிரதேச வழக்கு மொழி பெரு ஆய்வுக்குரியது. இங்கு பல படைப்பாளிகள் பிரதேசத்து மொழி வழக்கினை படைப்பிலக்கியங்களில் எழுத முனைந்து தோற்றுப் போயுள்ளனர். தீரனை பொறுத்தவரையில் பிரதே வழக்கு மொழி நட்டுமையில் வெற்றி கண்டிருக்கிறது எனலாம். இம்மாதிரியான மொழி அழகினை படைப்புக்குள் எப்படி உட் செலுத்தினீர்கள்?

 பதில்: இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனது தந்தை ஒரு போடியார். வயல் நிலத்திற்கு சொந்தமானவராக இருந்தார். சிறுவயது முதல் எங்களை வயலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு வேலை செய்யும் பல விவசாயி மனிதர்களுடன் நான் நெருக்கமான உறவினை கொண்டிருந்தேன். அங்கு பேசப்படும் பெரும்பாலான சொற்கள் வயல் நிலங்கள் குறித்தவையாக இருந்திருக்கின்றன. ஜனாகிராமன், கி.ரா, வ.அ., டானியல் போன்றவர்களின் படைப்புக்களும் மண் சாரந்த வாசிப்புக்களின் பக்கமும் எழுத்துக்களின் பக்கமும் என்னை தள்ளி விட்டது. இந்த உந்துதலில் முதல் முதலாக வயல்காரர்கள் பற்றிய சிறுகதை ஒன்றினை எழுதினேன். வளவு நெறஞ்ச நிலாஎன்பது அக்கதையின் பெயர். வட்டைக்குள் வைத்து வயல்காரன் ஒருவன் தனது காதலியை சந்திக்கச் சென்ற கதையினை எனக்குச் சொன்னான். அந்தக் கதையில் பெரிதான திருப்தி எனக்கு ஏற்படவில்லை. இன்னும் பல சங்கதிகளை சொல்வதற்கு அந்தக் கதையில் ஏராளம் இருந்தன. போடியாரின் மனைவியிடம் கள்ளக் காதல் கொண்டு இரவுகளில் அவள் வீட்டிற்கு சென்று வருகின்ற வயல்காரன் எனது கதையின் சாரமானான். பிறகு அந்தக் கதை காணாமலே போய்விட்டது. இந்த தருணத்தில்தான் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் போட்டியொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நட்டுமை நாவலினை அனுப்பி வைத்திருந்தேன். அது தெரிவு செய்யப்பட்டிருந்தது.

நட்டுமை என்ற பெயர் எப்படி வந்தது என்பது சுவாரஷ்யமானது. வயல்காரர்களிடமிருந்துதான் அதனைப் பெற்றுக் கொண்டேன். நட்டுமை என்பது களவுவழி செயற்பாட்டினை குறிக்கிறது. வயல்நிலங்களில் களவுத் திருப்பலின் ஊடாக நீரை மாற்றி விடுவதற்கும், கிராமிய மக்களின் வாழ்வியலில் கள்ள உறவினை நாசூக்காய் சொல்வதற்கும் நட்டுமை என கூறுவர். நட்டுமையினை பல தடவைகள் திருத்தியுள்ளேன். எனக்கு திருப்தியடையும் வரை படைப்புக்களை திருத்திக் கொண்டேயிருப்பேன். இவற்றையெல்லாம் பாவலர் பஸீல் காரியப்பரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.

 

கேள்வி: நீங்கள் முதல் முதலாக எழுதி வெளிவந்த சிறுகதை பற்றி சொல்லுங்கள்?

  பதில்: நீலக் காற்சட்டடைஎன்பதுதான் அக்கதையின் பெயர். எங்களூர் பாடசாலையொன்றில் நீலக் காற்சட்டை அணிந்து வர வேண்டும் என்கின்ற கட்டளை பிறப்பிக்கப்பட்ட நேரமது. வறுமைப்பட்ட சிறுவனொருவன் நீலக் காற்சட்டை இல்லாமல் வெள்ளை காற்சட்டையினை அணிந்து வருகிறான். அப்பாடசாலையின் அதிபர் அச் சிறுவனுக்கு அடித்து வீட்டிற்கு விரட்டி விட்டார். அச் சிறுவனுடைய தாய் இத்துயரத்தினை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அதனையே நானும் ஒரு கதையாக உருவாக்கினேன். அக்கதை 1979ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இதுவரைக்கும் முப்பதைந்து கதைகள் எழுதியுள்ளேன். வெள்ளிவிரல் தொகுப்பில் 12 கதைகளும், வல்லமை தாராயோ தொகுதியில் 10 கதைகளும், தீரதம் தொகுதியில் 8கதைகளும்,வெளிவந்துள்ளன. இதில் துயரமான செய்தி என்னவென்றால் பிறகு கவிதைகள் எழுதத் தொடங்கினேன். பதினைந்து வருடங்கள் அநியாயமாக கழித்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.

 

கேள்வி: இலக்கிய படைப்புக்கள் வெவ்வேறு கோணங்களில் பல காலகட்டங்களில் இயக்கம் கண்டிருக்கின்றன. தீரனின் இலக்கிய உலகம் எந்தக் கோணங்களிலானது? பாத்திரங்களின் வடிவமைப்பு எம்மாதிரியானது?

 பதில்: படைப்புக்களில் எப்பொழுதும் பாமர மக்களும், அவர்களின் மொழியுமே எனக்கு பொருத்தமாயிருக்கிறது. என்னுடைய உலகம் பாமரர்களின் உலகம். நட்டுமையில் வருகின்ற உமர்லெவ்வை பிழையான முறையில் பிறந்த ஹராங்குட்டி. தனது வாழ்நாளில் நகரங்களை காணாதவன். அவன் எப்படி சமூகத்தின் மேல் தளத்தில் நின்றான் என்பதை உறுதிப்படுத்தினேன். இதே போன்று கொல்வதெழுதுதல் 90’ வரும் முத்து முகம்மது மற்றும் மைமூனா போன்ற பாத்திரங்கள் இதனையே பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டன. இம்மாதிரியான எல்லா கதாப்பாத்திரங்களுடனும் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதுதான் உண்மையானது.

 

கேள்வி: தீரனின் கதைகளில் பெண்களைச் சீண்டுதலுடன் பாலியல் வேட்கையும் அதிகமாயிருக்கிறதே?

 பதில்: நான் யதார்தத்தினையே எழுதுகிறேன். இங்கு பெண் சீண்டலும் பாலியலும் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனையே நான் வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். பெண்களின் முகத்தினை பார்ப்பதை விட மார்பகங்களை பார்க்கின்ற ஆண் வர்க்கத்தினையே நான் அதிகமாய் கண்டிருக்கிறேன். நான் பெண் சீண்டலையும் பாலியலையும் மாத்திரம் எழுதவில்லை எல்லா நிலைகளையும் கதைகளாக்கியுள்ளேன். ஆனால் எல்லோரும் பெண் சீண்டல்கள் மீதும் பாலியல் கதைகளின் மீதுமே வாசிப்பினை நிகழ்த்துகின்றனர். எனது படைப்புக்களை வயது வந்தவர்களுக்கு மாத்திரம் என விமர்சித்தவர்களே அதிகமுண்டு.

 

கேள்வி: வெளிப்படையாக கிராமிய மக்களின் தூஷண மொழியினையும், கள்ள உறவுகள் குறித்தும் ஔிவு மறைவின்றி எழுதியிருக்கிறீர்கள். படைப்பிலக்கிய போக்கில் இவ்வகைப்பாட்டினை வெளி வாசகர்கள் எப்படியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

 பதில்: வாசகர்கள் மாத்திரமல்ல என்னை தெரிந்த உறவுக்காரர்கள் கூட நான் எழுதிய எல்லா கதைகளையும் என்னை தொடர்பு படுத்தியே பார்த்துள்ளார்கள். உண்மையில்,நான் மற்ற மனிதர்களின் அனுபவங்களையே எழுதினேன். இதனால் என்னுடைய அனுபவங்கள் குறித்து நிறையவற்றை எழுத முடியாமலே போய்விட்டது.

 

கேள்வி: இலக்கிய வாதிகளுடனான உறவுகளிலும், சந்திப்பிலும் தீரன் அதிகமாக கலந்து கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டிருக்கிறதே?

  பதில்: சிலதை வெளிப்படையாக சொல்ல முடியாது. முகநூலில் அரங்கேறுகின்ற கூத்துகள் இதற்கு ஒரு காரணமாகவிருக்கிறது. தரமில்லாத படைப்புக்களும், படைப்பாளிகளும் இங்கு கொண்டாடுகின்ற சூழல் உருவாகியிருக்கிறது. இது அபத்தமானது. காத்திரமான இலக்கிய கூட்டங்களுக்கும் உரையாடல் நிகழ்வுகளுக்கும் நான் தவறாமல் சென்றிருக்கிறேன். இதனையே விரும்புகிறேன். பட்டங்கள், விருதுகள், என எவற்றையும் நான் விரும்புவதில்லை. இதுவரை காலம் ,பெரும்பாலும் இவைகளை புறக்கணித்தே வந்திருக்கிறேன். பஸீல் காரியப்பர் கூட இவற்றினை நிராகரித்திருக்கிறார். பாவலர் நூல் அச்சிலிருக்கும் போது அந்தப் பணியினை மேற் கொண்ட ஒருவரின் குறிப்பினை பஸீல் காரியப்பரினால் பார்க்க நேர்ந்தது. மிக அதிகமாக புகழப்பட்டிருந்த பஸீல் காரியப்பர் குறித்த வரியினை நீக்கி விடுமாறு பஸீல் காரியப்பர் வற்புருத்தியிருந்தார். எனினும் அது நீக்கப்படவில்லை. அச்சகத்திலிருந்து அனைத்து புத்தகங்களையும் பலாத்காரமாக கொண்டு வந்து எரித்தே விட்டார். எப்பொழுதும் உள்ளார்ந்த மனிதர்களை தேடுகிறேன் என பஸீல் காரியப்பர் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆத்மீகத்தின் பக்கம் எனது நாட்டங்கள் அமைவதற்கும் பஸீல் காரியப்பரே முதன்மையாக இருந்தார் என்பேன்.

 

கேள்வி: விருதுகளை நிராகரித்தல், வெளியீட்டு நிகழ்வுகளை மறுத்தல் என தீரனின் இலக்கிய போக்கு தனித்துவமானது. ஆகவே தீரன் எதனை நோக்கி எழுதுகிறார்? அது ஆத்ம திருப்திக்கான இலக்கியமா?

 பதில்: அப்படி பொய் சொல்ல முடியாது. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இயங்குகிறேன். புகழை நான் நம்ப மறுக்கிறேன்.அபூர்வமாக எனக்கு கிடைத்த சில விருதுகளை குப்பையில் போடவே நினைக்கிறேன். வயது கடந்த செல்ல செல்ல பக்குவம் அதிகரிப்பதாகவே உணர்கிறேன். சூஃபிச போக்கிற்கு ஏற்ப என் சிந்தனைகளையும் எழுத்துக்களையும் மாற்ற முயற்சிக்கிறேன். நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 போன்ற நாவல்களில் இறைநேசர்களின் செயற்பாடுகள் குறித்து ஆங்காங்கே எழுதியுள்ளேன். மூலி என்றொரு நாவலினை ஆரம்பித்திருக்கிறேன். கஞ்சா குறித்து மூலி என்ற சொல் வழக்கிலிருக்கிறது. கஞ்சாவின் விற்பனை மற்றும் பாவனை அதனூடான ஆத்மீக செயற்பாட்டு நம்பிக்கைகள் குறித்து அந்நாவல் பேசும்.

 

கேள்வி: பாவலர் பஸீல் காரியப்பர் மீதான உங்களது உறவு நெடியது. அது பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

 பதில்: பஸீல் காரியப்பர் எனது உறவுக்காரர். நாங்கள் காரியப்பர் குடும்பம். குடும்ப உறவினையும் தாண்டி இலக்கிய உறவு எங்களுக்குள் நீட்சியாகவிருந்தது. நட்டுமை போகவில்லை எனும் அவரது கவிதை ஒன்றினை கடற்கரை பள்ளிவாயலில் வைத்து எனக்கு வாசித்து காட்டினார். நட்டுமை அவர் மூலமாகவே எனக்கு அறிமுகமாகியது. பாவலர் பஸீல் காரியப்பர் பற்றி தொடராக விடிவெள்ளியில் எழுதியிருக்கிறேன். இருபத்தி மூன்று கட்டுரைகள் வெளிவந்தன. அவற்றினை தொகுப்பாக கூட வெளிக்கொண்டு வர முடியும். பலரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விடயங்களை கூட என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்று இலங்கை பாடநூலில் இடம் பெற்றுள்ள அழகான ஒரு சோடிக் கண்கள்கவிதை குறித்து இன்று பிழையான தகவல்கள் வழங்கப்படுகின்றன. அக்கவிதையின் உண்மைப் பெயர் ஊற்றுக்கண்என்பதுதான். உண்மையில் இரண்டு கண்களும் தெரியாத ஒரு பெண்னை கண்டு ரயில்வே நிலையத்தில் பஸில் காரியப்பருக்கு எழுந்த கவிதையே அது.

 

கேள்வி: போர் பற்றியே இலங்கையில் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்தே பேசப்பட்டிருக்கிறது. இதனால் பிற பேசுபொருளை கொண்ட படைப்பிலக்கியங்கள் பேசப்படாமல் இருந்திருக்கின்றனவா?

 பதில்: தமிழ் மக்களின் துயரம் பெரிது. அது குறித்து படைப்புக்கள் பேசியவை நியாயமானவைதான். அதே நேரத்தில் விடுதலை புலிகளால் முஸ்லிம் மக்கள் எதிர் கொண்ட அநியாயங்கள் ஏராளமானவை. இவை குறித்தும் இங்கு படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. கொல்வதெழுதுதல் 90ல் இது பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். ஆமீன் என்ற பெயரில் ஒரு நாவலினை எழுதியிருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. சாய்ந்தமருதில் ஏற்பட்ட புலிகள் செய்த குண்டு வெடிப்பினை மையமாகமக் கொண்ட படைப்பது. அது ஒரு நாவலா அல்லது ஆவண படைப்பா எனும் சிக்கலில் அல்லாடிக் கொண்டிருக்கிறேன். நமது படைப்புக்களை பேசுவதற்கு நம்மவர்கள் அதிகமாக தயங்குகிறார்கள். இலக்கிய போக்கில் இந்த இருட்டடிப்பு அதிகமாகவே இருக்கிறது.

00

படிகள் -சஞ்சிகை- வசீம் அக்ரம்


படிகள் -சஞ்சிகை- நேர்காணல்

வசீம் அக்ரம்









நேர்காணல் 1. உங்களது இலக்கியப் பின்புலம் எவ்வாறான சூலலில் உருவானது... ? அந்தக்காலப் பகுதியில் ஈழத்து இலக்கியச் செல்நெறி எவ்வாறான தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது...


என் இலக்கியப் பின்புலம் உருவான சூழல்...? சிக்கலான இந்த வினாவுக்கு விடையளிப்பது சிரமமானது வசீம். சொல்லப்போனால் ஒரு குட்டி நூலகமாகவே இருந்த என் தாய்வீடுதான் என் எழுத்துத் துறைக்கு வித்திட்டதாக கூறமுடியும்.. பத்திரிகைகள் தினசரிகள் சஞ்சிகைகள் நூல்கள்..என்று குவிந்திருந்த என் தாய்மாமனின் அறையில்தான் நான் திருட்டுத்தனமாக ஒரு புத்தகப் புழுவாக நுழைந்துவிடுவேன்..எங்கள் வீட்டில் அனைவருமே வாசிப்பார்கள்..இன்னது என்றில்லை..எதையும் எப்போதும் யாராவது வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்..நான் கூட அந்த அறையில் ‘’மின்னல்’’ என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டும் பாராட்டும்,,ஏச்சும் வாங்கிக் கொண்டுமிருந்தேன்.. இப்படித்தான் ஒரு சூழல் உருவானதாக எண்ணுகிறேன்..
மற்றது..நான் எழுத வந்த காலப்பகுதியில் ஈழத்து இலக்கியச் செல்நெறி பற்றிச் சொல்வதானால் அப்போதிருந்த ,முற்போக்கு இலக்கியங்களின் செல்வாக்கு சற்று தணிய ஆரம்பித்து விட்டது. காரணம் தனி ஈழத்துக்கான போர் கூர்மைப்பட ஆரம்பித்திருந்தது..இந்நிலையில் முற்போக்கு இலக்கியவாதிகளும் தளர்ந்து போக நேரிட்டது..விரைவிலேயே ஈழத்து இலக்கியம் போர்க்கால இலக்கியமாக உருமாறி நிலை கொண்டது...அந்தக் காலப் பகுதியில்தான் என் அதிகமான இலக்கிய செயற்பாடுகள் இருந்தன என்பேன்... போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் எழுதிக் கொண்டிருக்கும் சிலரில் நானும் ஒருத்தன் என சொல்லிக் கொள்ள முடியும்...



2. உங்கள் சிறுகதைகள், நாவல்கள் தென்கிழக்குச் சமூகத்தைச் சுற்றியே வந்துள்ளது. உங்கள் பிரதிகள் அச்சமூகத்தின் இருப்பை கட்டுடைப்புச் செய்கின்றன.. அதுதொடர்பாக என்ன கருதுகின்றீர்கள்


ஆமாம் தென்கிழக்குச் சமுகத்தின் ஓர் இலக்கியப் பிரதிநிதி என்ற வகையில் நான் என் சமுகம் சார்ந்த எழுத்துக்களை முன் வைப்பது என் கடமை என்றே கருதுகிறேன். அச்சமுகத்தின் அரசியல் பொருளாதார சமூகவியல் மற்றும் பாரம்பரிய கலாசாரங்களை எதிர்கால இளைய சந்ததிகளுக்கு கடத்தவும்- ஏனைய சமூகங்களுக்கு எத்தி வைக்கவும் முயல்கிறேன்...அவர்களுக்குள் வாழ்ந்து அவர்களது மொழியில் பேசுவது இலகுவானது...பொருத்தமானது . அதற்காக அந்த வரையறைக்குள் மட்டுமே எழுத வேண்டும் என்ற ஓர் அவசியமில்லை என் நாவல்களில் இதை நான் வெகுவாகப் பிரயோகித்திருந்தாலும் என் சில புனைகதைகளிலும் பல கவிதைகளிலும் இவ்வட்டத்தை தாண்டியும் எழுதியிருக்கிறேன்.....
என் பிரதிகள் இச்சமுகத்தின் இருப்பை கட்டுடைப்புச் செய்கின்றன என்பதில் எனக்கு உடன்பாடில்லை...ஒரு சமுகத்தின் இருப்பை கட்ட்டுடைப்புச் செய்வது என்பது இலக்கியத்தால் மட்டும் முடிகிற காரியமல்ல...



3. உங்கள் கதைகளில் இனவுறவு, முரண்பாடு என்பன பதிவாகியுள்ளன. அது தொடர்பாக உங்கள் மீள் வாசிப்பு என்ன விதமான எண்ணங்களைத் தருகின்றன...

தென்கிழக்கில் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ‘’உடன்’’ சமூகங்களாக வாழ்வதனால் அங்கு இன முரண்பாடுகளும் இன நல்லுறவுகளும் ஏற்படுவது என்பது இயல்பானதே,,, இதனை முடியுமானளவுக்கு என் புனைவுகளில் கையாண்டிருக்கிறேன்...ஆயின் பிரதிகளில் ஊடுருவிப்பாயும் இனத்துவேஷ விஷத்தை ஒரு போதும் நான் என் புனைவுகளில் கசியக் கூட விட்டதில்லை.. சில பாத்திரங்கள் இனத்துவேஷக் கருத்துக்களை கூறும் போது உடனடியாக இன்னொரு பாத்திரத்தின் வாயிலாக அதற்கு தக்க பதிலடி கொடுப்பததை என் ‘’கட்டாய உத்தி’’யாக வைத்துள்ளேன்... எனது ‘அணில்’ ‘’மீள்தகவு;’’ போன்ற கதைகளில் இதனை அதிகமாகக் கையாண்டுள்ளேன்...

இவற்றின் மீதான மீள்வாசிப்பின் போது இந்த உத்தியின் மீது எனக்கு ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது... இனங்கள் மத்தியில் துவேஷத்தை விதைத்துவிட்டு இறந்து போவதில் எனக்கு உடன்பாடில்லை....பொது மானுடம் மீதான அன்பும் அக்கறையுமே இஸ்லாத்தின் அடிவேராக இருப்பதனால் இதனைக் கைக்கொள்வது நம் மீதான கடமையாகிறது...



4. ஒரு வகையான கட்டுக்கோப்புடன் முஸ்லிம்சமூகம் வாழ்ந்து வருகின்றது. ஆனால் நட்டுமை இந்த மரபினை மாற்றியது என்ற விமர்சனம் பற்றி...

கட்டுக் கோப்புடன் முஸ்லிம் சமுகம் வாழ்ந்து வந்தாலும் செறிந்து வாழும் ஒரு சமூகத்தினுள் சில சமூகப் பிறழ்வுகள் ஊடுருவியிருக்கவே செய்யும்...அது இயல்பானதே...வைதீகத் தளர்வுகள் சில கட்டுக்களை மீற வைத்து விடுவதுண்டு...நட்டுமை அவ்வாறான ஒரு விடயமே....போரியல் காலத்தில் அதிகமான பாமர ஏழை முஸ்லிம் பெண்கள் தொழில் வாய்ப்பு தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் புலம் பெயர்ந்த போது அந்த சமூகத்திடையே மதக்கட்டுப்பாடுகள் அதிகளவில் மீறப்பட வில்லையா...?

ஆயின் நட்டுமை நாவல் இதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஆதிக்கம் மிக்க நிலவுடமைச் சமுக மனிதர்களின் களவொழுக்கத்தை பேசுகிறதே தவிர இதனை ‘’மரபை மாற்றியது’’ என்று கொள்ள முடியாது....



5. கொல்வதெழுதல் 90 ஒரு சமூகத்தின் போர்க்காலப் பதிவு. அதன் யதார்த்தம் பற்றி...

போர்க்காலத்தில் தென்கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வகைத்தன்மைகள் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று பல அறிவுஜீவிகள் கருத்துரைக்கின்றனர்..இது சரியாகவும் இருக்கலாம்..ஆயினும் இக்காலகட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் போரின் கொடுமைகள் பற்றி எழுதாமலும் இல்லை.. இந்தப் பகைப்புலத்தை மையப்படுத்திய வேறு பல சிறுகதைகள் கவிதைகளில் பேசப்பட்டாலும் நாவல் என்ற வகையில் ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை...

கொல்வதெழுதல் 90 என்ற என் புதினம் அக்காலத்தில் நிராயுதபாணியாகவும் நிர்க்கதியாகவும் நின்ற ஒரு சமுகத்தை முடியுமானளவு விழிப்புற வைத்த ஒரு அரசியல் கட்சியான முஸ்லிம் கொங்க்ரசினதும் அதன் அடித்தளமாக இருந்த கிழக்கு மக்களின் வாழ்வியலையும் ஓரளவேனும் பதிவு செய்கின்ற ஒரு புனைவு முயற்சியாகும்.. கொல்வதெழுதல் 90 அந்த குறைபாட்டை ஓரளவுக்கு நிவர்த்தி செய்திருப்பதாகவே கருதுகிறேன்


6. கடந்த தசாப்தத்தில் முஸ்லிம் தேசம் என்ற இலக்கியக் கிளர்ச்சி எழுந்ததே... அதன் தற்போதைய நிலையை விபரிக்க இயலுமா...


முஸ்லிம் தேசம் என்ற இலக்கியக் கிளர்ச்சி முதலில் தென்கிழக்கில்தான் பேசப்பட்டது.. தமிழ் ஈழத்திற்கு ஒரு மாற்று என்று இதனை விமர்சனம் செய்தனர்,..எனினும் அது இப்பகுதி முஸ்லிம்களுக்கு தேவைப்பட்ட ஒன்றாக இருந்ததை மறுக்க முடியாது...எனினும் முஸ்லிம்தேசம் என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் வகுப்பது சிரமமான ஒன்று... இதில் ஒரு தெளிவு பெற்ற பின்தான் தேசம் என்கிற ஒரு விஷயத்தோடு பொருந்திப் போகலாம்...எனினும் துரதிஷ்டவசமாக இதனைக் கூர்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடுள்ள பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கே உரித்தான ‘’அசமந்தம்’’ மற்றும் ‘’காழ்ப்புணர்வு’’ களால் மிகச் சரியாக முன் கொண்டு செல்லாமையால் இது வெறுமனே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில கெட்டித்தனமான மாணவர்களாலும் ஒரு சில பத்தி எழுத்தாளர்களாலும் மிகச் சில ‘’இலக்கியவாதிகளாலும் மட்டும் பேசப்பட்ட பொருளாகிப் பின் உறங்குநிலைக்கு வந்து விட்டது...


7. ஈழத்து கவிதைகளின் இன்றைய நிலையும்.. அதில் கிழக்குப்பிராந்தியத்தின் வகிபங்கையும் ஊவ்வாறு கணிப்பீர்கள்

இன்றைய கவிதைகளின் வீச்செல்லை பிரபஞ்சம் வரை எறியப்பட்டு விட்டது...ஆச்சரியமிக்க பல புதிய கவிஞர்களின் அதிசய மொழிகள் என்னை ஈர்க்கின்றன...கிழக்கில் போர்க்கால அலைகள் முடிந்த பின் இணையக் கவிதை யுகம் உருவாகி விட்டது..சர்வதேசத் தமிழுலகில் பேர்பெற்ற பல கவிஞர்கள் கிழக்கில் நிலை கொண்டிருக்கிறார்கள்...இங்கு பட்டியலிட முடியாத அளவில் அதிகமதிகமான கவிதைத் தொகுதிகள் கிழக்கில்தான் வெளிவருகின்றன...சர்வதேச கவியரங்கில் தற்போது கிழக்குதான் தலைமைதாங்கிக் கொண்டிருக்கிறது...


8. உங்கள் படைப்புகள் பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளன. உண்மையில் போட்டிகளில் அங்கீகாரம் கிடைப்பதாக நம்புகின்றீர்களா? அல்லது போட்டிகளில் பங்குபற்றுவதன் நோக்கம் என்ன?


தொன்றுதொட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றே வருகின்றன... அதில் ஒன்றும் குற்றமில்லை... போட்டிக்கு எழுதுவதிலும் படைப்பாளிகள் சளைத்துப் போவதுமில்லை....நானும் ஆரம்பத்தில் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறுவதை ஓர் அங்கீகாரமாகவே கருதியிருந்தேன்..அதனால் போட்டிக்கு அதிகளவில் என் படைப்புக்களை அனுப்பியிருந்தேன்..பல போட்டிகளில் வெற்றிகளும் பெற்றேன். எனினும் என் இப்போதைய மன நிலையில் இது தேவையற்ற ஒன்றாக கருதுகிறேன்.. ஒரு போட்டியில் நடுவர்களாக பெரும்பாலும் மூன்றுபேர் கடமை செய்கின்றனர்..ஒரு படைப்பு இருவரைக் கவர்ந்தாலே அது வெற்றி பெற்றுவிடும்...ஆக, அந்த இருவரைக் கவரும் ஒரு விஷயம் ஓர் இலக்கிய அங்கீகாரமாக கொள்ளத்தக்கதல்ல.. அதிலும் சில நடுவர்கள் நயவஞ்சகர்களாகவும் இருப்பதுண்டு...

மற்றது ஒரு இலக்கியப் போட்டியில் ஒரு முதுபெரும் எழுத்தாளரும் ஒரு இளைய எழுத்தாளரும் தம் படைப்புக்களை அனுப்புவதில் ஒரு முரண் நகை இருக்கிறது.. ஒரு ஒலிம்பிக் ஓட்டவீரன் ஒரு குழந்தையை முந்திச் செல்வதில் என்ன பெருமை இருக்கிறது...மறுதலையாக சில சமயம் ஒரு ஆமை ஒரு முயலை முந்தி விடுகிறது..மேலும் ஒரு நடுவர் தன் முகாம் சார்ந்த தன் முகம் தெரிந்த நபர்களின் கச்சடாப் படைப்புக்களுக்கு அதிக மதிப்பெண் கொடுப்பது வழக்கம்.. ஆக முரண்பாடுகளின் மொத்த விளையாட்டாக இருக்கிற இந்த போட்டிகளுக்கு இனி என் படைப்புக்களை அனுப்புவதில்லை என்ற உறுதியில் இருக்கிறேன்... என் எழுத்துக்கான அங்கீகாரம் நீங்கள் என்னை நேர்காணல் செய்வதில் இருக்கிறது....


9. தூது என்ற சிறுசஞ்சிகை ஒன்றை வெளியிட்ட அனுபவங்களை முன்வைத்து, கிழக்கில் வெளிவந்த காத்திரமான சஞ்சிகைகள் அஸ்த்தமித்துவிட்டனவே அது பற்றி....

தூது என்ற ஒரு கவிதைச் சிற்றேட்டை 1983இலிருந்து 16 இதழ்கள் வரை வெளியிட்டேன்...அது பற்பல காரணங்களால் 1989 இல் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.... பொதுவாக சஞ்சிகைகளின் அஸ்தமனத்துக்கு பல காரணங்கள் உள்ளன.. சந்தை வாய்ப்பின்மை... மந்த விற்பனை..அச்சுச் செலவு- சந்தாதாரர் விளம்பரதாரரை தேடுவதில் உள்ள சிரமங்கள்..அரச உதவியின்மை…அதிகரித்த தபாற் செலவு... என்று இவற்றுடன் இன்னும் ஆயிரம் உப பிரச்சினைகள்...இதில் நின்று பிடிப்பது மகா கஷ்டமான விஷயம்.. மற்றது தற்போதைய சூழலில் இணையப் புரட்சிக்குப்பின் சமுக வலைத்தளங்களின் வருகை இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டது.. இப்போதெல்லாம் உடனடியாக எழுதி அதற்கு உடனடியான விமர்சனத்தை காணுகிற நிலைக்கு நம்மவர்கள் பழக்கப்பட்டு விட்டனர்... சஞ்சிகைக்கு எழுதி அது வெளிவருமட்டும் காத்துக் கொண்டிருப்பது நேர விரயமாகிவிட்டது எனக் கருதுகின்றனர்...இதனால் பலரும் சஞ்சிகையை விரும்புவதில்லை/ இதனால் சஞ்சிகை நடத்துவோர் எல்லாவகையிலும் நொந்துபோய் எதோ ஒரு இலட்சியத்துக்காய் விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருக்கிரார்கள்...


10. இணையங்கள், சமூக ஊடகங்கள் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு நிறைவான பணியினை ஆற்றுகின்றன என்ற வாதம் தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள கருத்தக்கள் என்ன?


அது பகுதியளவில் உண்மைதான்....ஆயின், நிறைவான பணி என்றில்லை.கணிசமான பணியினை ஆற்றுகின்றன எனலாம்..கணினி அறிவிருந்தால் எல்லோரும் இலகுவில் தம் படைப்புக்களை அரங்கேற்றி விடலாம்..இப்போது வருகின்ற பல கவிதைத் தொகுதிகள் பெரும்பாலும் முகநூலிலும் வலைத்தளங்களிலும் எழுதி வருபவர்களால்தான் கொணரப்படுகிறது..சஞ்சிகைக் காலமாக இருந்தால் இவை ஒருபோதும் வர வாய்ப்பில்லை..இதில் தர நிர்ணயக் கட்டுப்பாடு ஏதும் இல்லையென்பதால் எல்லாக் குப்பைகளும் ‘’பாஸ்ட்பூட்’டாக சுடச்சுட சந்தைக்கு வந்து விடுகின்றன..


11 படிகள் சஞ்சிகை பற்றிய உங்கள் பார்வை....


நான் ஏற்கனவே சொன்னபடி2003 இலிருந்து சிரமதசையுடனேயே படிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது என அறிகிறேன்... தமிழ் கூறும் நல்லுலகில் படிகளுக்கென்று ஒரு நிரந்தர வாசகர் வட்டம் இருக்கிறது.. இலக்கிய அறிவுமிக்க ஆசிரியர் குழாமும் ஆலோசகரும் இருக்கிறார்கள்..படிகளை ஒரு மின்னிதழாக வடிவமைக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...என்றும் உண்டு..



000





தினக்குரல்---பா.மோகனதாஸ்

 

தினக்குரல் வாரமலர்

23.12.2018

 தீரன் ஆர்.எம்.நெளசாத் உடனான நேர்காணல்.

===============

பா.மோகனதாஸ்

 

 

01) கேள்வி :- கவிதை,சிறுகதை,கட்டுரை,நாவல்,காவியம்,உருவகக்கதை,குறும்பாக்கள் என பல்துறைகளில் தடம் பதித்த நீங்கள் இலக்கியத்துறைக்குள் வந்ததுஆசையுடனா ஆவலுடனா அல்லது ஏதேச்சையாகவா ?

 மனம் கொள்ளா ஆசையுடனும்  அடக்க முடியா ஆவலுடனும் எதேச்சையாகத்தான் இத்துறைக்குள் வந்தேன்...  கல்முனை ஸாஹிறாஇலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்புசஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று  பக்க வேர்கள் விட்டு நிலை கொண்டேன்..

 

02) கேள்வி :- ஜீவநதி வெளியீடாக 2017 இல் ஒய்த்தா மாமா,கள்ளக்கோழி,மறிக்கிடா,பொன்னெழுத்துப் பீங்கான்,அணில்,தீரதம்,காக்காமாரும் தோழர்களும்,மும்மான்,கபடப்பறவைகள்,ஆத்துமீன் ஆசை ஆகிய சிறுகதைகள் அடங்கிய தீரதம் சிறுகதைத் தொகுதி யதார்த்த வாழ்வியலை புடம்போடுகிறது. அதிலும் ஒரு படைப்பாளன் இறந்ததையிட்டு நிகழும் சம்பவங்களைக் கொண்டதாக கபடப் பறவைகள் சிறுகதை அமைகிறது. அவ்வகையில் இக்கதையின் பின்னணி சூட்சுமம் பற்றி கூற முடியுமா ?

 இலங்கையில் பல எழுத்தாளர்களின் ‘’இலக்கிய வாழ்வு’’  பெரும்பாலும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது,, ஒரு பழைய இரும்புச் சாமான் தேவைப்பட்டு நாடான் கடைக்குள் நுழைந்து தேடிய பொது எமது பகுதியைச் சேர்ந்த காலம்சென்ற  ஒரு மூத்த எழுத்தாளரின் ஒரு விருது பழைய இரும்புக் குவியல்களுக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.... அந்த விருதை கையில் எடுத்து பார்த்த பொது அது எனக்குச் சொன்ன செய்திகள் ஏராளம்...’’நமக்கும் அது வழியே நாம் போகு மட்டும்......’’ என்று நமது யோசனை தறிகெட்டுப் பாய்ந்தது... அந்தக் கணப்பொழுதுதான் ‘’கபடப் பறவை’’  கதையை எழுதத் தூண்டியது..ஞானம் சஞ்சிகையில் அது பிரசுரம் பெற்ற பின்  அது பற்றி வந்த எதிர் வினைகள் பல....

 

03) கேள்வி :- வெள்ளிவிரல்,வல்லமை தாராயோதீரதம்  ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நட்டுமை , கொல்வதெழுதுதல் 90வக்காத்துக் குளம் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ள நீங்கள்ஆக்க இலக்கியங்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டுமெனவும் கருதுகின்றீர்கள் ?

 யதார்த்தமான வாழ்வியலை ஒட்டியதாக.. உயர் மானுடத்தை அவாவும் விதமாக அமைதலே சிறந்த ஆக்கஇலக்கியம் எனக் கருதுகின்றேன்..அதையே என் படைப்புகளில் கொண்டு வர முயற்சிக்கின்றேன்.. காமாந்தரக் கதைகளையும் தனி நபர் வாந்திகளையும்  ஆக்க இலக்கியங்களாக நான் ஒப்புக் கொள்வதில்லை.. பாலியல்-பெண்ணியல் ஆகிய ஒரு வட்டத்துக்குள் மட்டும் நின்று செயற்படல் சிலருக்கு தொழிலாகவே அமைந்து விட்டது...இவற்றுக்கும் மேலாக நம் சிந்தனை வட்டம் விரிவு பெறுதல் தேவை..  மெய்ஞானமும்விஞ்ஞானமும் விரவி நிற்கும் வகையிலான சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிக்க வேண்டும்.. இதன் மூலமே சிறந்த இலக்கியங்களை ஆக்க முடியும் என திடமாக நம்புகிறேன்...

 

03) கேள்வி :- நூல்கள் எழுதி வெளியீட்டுக்கொண்டிருந்த நீங்கள் 2015 இல் அபாயா என் கறுப்பு வானம் என்ற மின் நூல் கவித்தொகுப்பினை கொணர்ந்ததன் நோக்கம் ?

  தற்போது  கதைகளை நான் ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தாலும் கவிதைகளும்தான் என்னிடம் இருந்தன... என் ஆரம்ப இலக்கியப பொழுதுகள் கவிதைகளையே ஒட்டி பெரும்பாலும் நகர்ந்திருந்தன...1

 1983களிலிருந்து  தூது என்ற கவிஏடு ஒன்றையும் பிரசுரித்துக் கொண்டிருந்தேன்...மேலும் அக்காலப் பகுதியில் றோணியோ- போட்டோ பிரதி கல் மூலமாக வேறு சில கவிதை பிரசுரங்களையும் மேற்கொண்டிருந்தேன்.. இவற்றில் வெளிவந்திருந்த என் கவிதைகள் நூலுருப் பெற ஒரு வழியும் இல்லாதிருந்த நிலையில் தமிழ் நாடு பிரதிலிபி என்ற அமைப்போடு எனக்கு ஏற்பட்ட தொடர்பின் நிமித்தம்  என் கவிதைகளை தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டனர்.. அவற்றை

https://www.pratilipi.com/theeran-r-m-nawshad/abaya-en-karuppu-vaanam......................என்னும் தளத்தில் காணலாம்

 

0) கேள்வி :- நீலாவணன் போன்ற ஒரு சிலரே காவியத்தில் கை தேர்ந்தவராகவுள்ளனர். அவ்வகையில் உங்களின் அழித்தாயே ஆழித்தாயே எனும் சுனாமி கடற்கோள் காவியம் உருவாகிய விதம் தொடர்பாக கூற விழைவது ?

 பல நிகழ்வுகள காவியங்கள்  உருவாக காரணங்களாக அமைந்த போதிலும்  இயற்கை அனர்த்தங்கள் ஒரு கட்டாயக் காரணமாக இருக்கின்றதை இலக்கிய வரலாறுகள் நெடுகிலும் நம்மால் காண முடிகிறது... வெள்ளக் காவியங்கள்.. சூறாவளிக் காவியங்கள் போன்றன நம் நாட்டு படைப்பாளிகளால் ஏராளமாகப்  பாடப்பட்டுள்ளன...

 கிழக்கின் பெரு வெள்ளக் காவியங்கள்...சூறாவளிக் காவியம் .  மகா கவியின் ஆறு காவியங்கள்... நீலாவணனின் வேளாண்மை  காப்பியக்கோ ஜின்னாஹ்  ஷரிபுத்தீனின் பல காப்பியங்கள்...பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் குறுங்காவியம் போன்றவற்றை படித்த ஒரு அருட்டுணர்வின் வெளிப்பாடாக இந்த சுனாமி அனர்த்தத்தை மையப் பொருளாகக் கொண்டு அழித்தாயே ஆழித்தாயே என்ற ஒரு  காவியத்தை எழுதினேன்... ஆயின் இது முற்று முழுதான காவிய மரபுகளையும் இலக்கண விதிகளையும் அச்சொட்டாக பின்பற்றி எழுதப்படவில்லை..   

 

 05) கேள்வி :- பிரான்ஸ் தமிழ் வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடாத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் காகித உறவுகள் நாடகத்திற்கு மூன்றாம் பரிசு உட்பட பல போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளீர்கள். அவ்வகையில் படைப்புகள் மற்றும் போட்டிகளுக்கானவை எவ்வாறான உத்திகளுடன் இருக்க வேண்டுமென கருதுகின்றீர்கள் ?

 போட்டிகளுக்கு அமைவாக எழுதப்படுபவை பெரும்பாலும்  வெற்றி பெறாமல் போவதுண்டு... இலக்கியப் போட்டிகளின் வெற்றிகள் யாரால்  அல்லது எத்தகைய காரணிகளால் தீர்மானிக்கப் படுகின்றன என்பதை வரையறை செய்வது  சிக்கலான ஒன்று.. ஒரு படைப்பில்தான் சிறந்த உத்திகள் கையாளப்பட வேண்டுமேயன்றி போட்டிக்கென்று ஒரு உத்தி தேவையில்லை... என் முகம் தெரியாத அறிமுகம் இல்லாத நடுவர்களால்தான் என் பல படைப்புக்கள் விருதுகளை வென்றுள்ளன.. இப்போது நான் போட்டிக்கென்று எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்....

 

06) கேள்வி :- நட்டுமை நாவலுடாக வாசகர்களை கிராமத்திற்குள் ஊசலாடவிட்டதென் பின்னணி பற்றி கூற முடியுமா ?

  என் தந்தையாருக்குச் சொந்தமான வயல் வெளிகளில் உலவி வருவது என் பிரதான பொழுது போக்காகவும் பகுதித் தொழிலாகவும்  இருந்து வந்துள்ளது....நட்டுமை என்ற சொல் அங்குதான் அறிமுகமானது... வயலும் வயல் சார்ந்த பிரதேச  மக்களும் எப்போதும் என்னைக் கவர்ந்திழுக்கிற ஈர்ப்பு விதிகள்....

 நட்டுமை’ என்  மூன்றாவது முழு நாவல் |  இது கிழக்கு மண்ணின்1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து  தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது.

ஈழத்தினுள் முடங்கிக் கிடந்த இலங்கை நாவல் துறையை தமிழ் நாட்டை நோக்கி நகர வைத்த பெருமை இந் நாவலுக்குண்டு  என பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் துறையில் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதித் தேர்வுக்காக, ‘கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத் தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல் சமூகவியலடிப்படையிலான விமர்சன நோக்கு “ என்ற தலைப்பில்  இந் நாவல் மாணவன்  முகமத் அஸ்மத் தினால் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

 சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். http://naddumai.blogspot.com/ என்ற தளத்தில் நட்டுமை பற்றிய முழு விபரத்தினையும் காணலாம் ..

 

     07)கேள்வி;-  ‘கொல்வதெழுதல்90’ நாவல் உருவாகவேண்டியதன் பின்னணி என்ன?

                      பள்ளிமுனைக் கிராமத்தின் கதைஎன்ற பெயரில் தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக ஒரு அரசியல் விவரணத் தொடராக 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக  பிரசுரமானது இது..  அக்காலத்து யுத்த அரசியல் போக்கினால்  பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின்  வாழ்வியல் பற்றிய இவ்விவரணம் பின்னர் நண்பர்களான எம். பௌசர்.. எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது மேலும் செவ்விதாக்கப்பட்டு  ~கொல்வதெழுதுதல். 90என்ற தலைப்பு மாற்றத்துடன்  காலச்சுவடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது..

 இந்நாவலுக்கு  தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானது...

தமிழ் நாட்டில் எஸ். ராமகிருஷ்ணன்  2000க்குப் பின் வெளியான முக்கியமான தமிழ் நாவல்களில்  இதுவும் என்று  என சிலாகித்துப் பேசியிருக்கிறார்..

ஆயின் இலங்கையில் .... ?  இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில "யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம "பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல் ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?)எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும் பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...... http://kolvatheluthuthal.blogspot.com/ இத்தளத்தில் இந்நாவல் பற்றி  விரிவான தகவல்கள் பெறமுடியும்

 

 08) கேள்வி :- சிறுகதை மற்றும் நாவல் படைப்பிற்குள் வாசகர்களை எவ்வாறு இறுகஈர்க்க வைக்கின்றீர்கள்  ?

 ஒரு சிறுகதையில் கையாண்ட உத்திகள் எவற்றையும் அடுத்த கதையில் நான் கையாள்வதில்லை. எழுதிய ஒரு சிறுகதையின்  கருவை விட்டும் முழுமையாக வெளிப்பட்டு இன்னொரு எழுதப்படாத கதையின் தளத்துக்குள் வருகின்றேன். தளமாறுபாடுகளும் வித்தியாசமான வார்ப்பு முறைகளும் பலவீனமான கருக்களைக் கூட  வன்மையடன் கட்டமைக்கின்றன.

 தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய  செய்தி என்னவாக இருப்பினும்  வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால் திருடப்படும் போது  நமது செய்தியை அவனது உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது..  இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே வேறுபாடுகள் உண்டு..

 

 9) கேள்வி :-இலக்கியத் துறையில் உங்களுக்கு கிடைத்த வரவேற்புகள் மற்றும் விருதுகள் குறித்து கூற விரும்புவது ?

 எனக்குக் கிடைத்தால் அது  என் திறமைக்குக் கிடைத்த விருது மற்றவருக்கு கிடைத்தால் அது  ‘’முகத்தாட்சண்ய’’ விருது என்று கூற மாட்டேன்...  இப்போது சமூக வலைத்தளத்தில் நாளொரு விருதும் பொழுதொரு பட்டமும்-கௌரவமும் பெரு மழையாகப் பொழிந்து கொண்டிருக்கின்றன... இப்போதெல்லாம் விருது-பட்டம் பெறாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்... 

 யாருடைய விருதும் அவரது மரணத்துக்குப் பின் பேசப்படுவதுமில்லை..கூட வருவதுமில்லை,,, உயிரோடு இருக்கும் போது ஒரு சிறு சந்தோசம் தவிர அதில் வேறொன்றுமில்லை.. எனவே நான் என் இப்போதைய மனநிலையில் இவை பற்றி ரொம்பவும் அலட்டிக் கொள்வதில்லை... வெளியில் சொல்லிக் கொள்வதுமில்லை...நாடான் கடையில் எனக்குக் கிடைத்த பேழை அநாதரவாகக் கிடக்க நான் சகித்துக் கொள்ளப் போவதுமில்லை..

 

10) கேள்வி : இளந்தலைமுறையினருக்கு எழுத்திலக்கியத் துறை சார்ந்து கூற விழைவது ?

 வாசியுங்கள்.. யோசியுங்கள்..நேசியுங்கள்..

 

௦௦௦