Thursday, March 2, 2023

தமிழன் தினசரி

 பாவேந்தல் 

பாலமுனை பாறூக் 






தமிழன் ஞாயிறு (26-02-2023) இதழின்  தமிழ்முரசு பக்கங்களில் தீரன் ஆர்.எம். நௌசாத் குறித்து நானெழுதிய குறிப்பு ஆளுமைகளின் அடையாளமாக இடம் பெற்றுள்ளளது.

முகநூல் நண்பர்களுக்காக  இங்கே அப்பக்கங்கள் பதிவு பெறுகின்றன.

நன்றி:-தமிழ்முரசு ஆசிரியர் ஜீவா சதாசிவம் 

ஆளுமைகளின் அடையாளம்- 22
------------------------------------------------------------

பாவேந்தல் பாலமுனை பாறூக்

மண்வாசனைப் படைப்புகளால்
மக்களை ஈர்த்த-
தீரன் ஆர்.எம். நௌசாத்.
-----------------------------

"பேரண்டத்தை வாசிக்கச் செல்லும்
ஒரு பறவை
பெரு வனத்தில் எங்கோ வீழும் 
ஒருசிறு சருகு

அந்தப் பறவைக்கும் 
ஒரு பாடல் இருக்கும்
அந்தச் சருகும்
ஒரு சரித்திரம் சொல்லும்"

(முத்திரையிடப்பட்ட மது -2021)

  
இலக்கிய வானில்  இறக்கை விரித்துப் பறக்கும்  பறவை-ஆர்.எம். நௌசாத்,  பாடும் கவிதை அது.

ஆர் எம் நௌசாத்,
ஆரப்பட்டமில்லாமல் அமைதியாக இருந்து  கனதியான ஆக்கங்களைத் தரும் படைப்பாளி,

படிமச்சிறப்போடு, சித்திரச் சிறைப்பிடிப்பாய்   உள்மனதைச் செப்பனிடும் உணர்வூற்றாய்க் கவிபடைக்கும் கவிஜோதி,

மண்வாசனை ததும்பும்  புனைவிலக்கியங்களை, கலைத்துவ நேர்த்தியோடு  தரும் கலைச்சிற்பி..,

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில்   பெரும்பங்கு வகிக்கும் கல்முனைப் பிரதேச இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக நாவல்,சிறுகதை,கவிதை ,பத்தி எழுத்து,சஞ்சிகை வெளியீடு என்பவற்றில் தடம் பதித்து வரும் முக்கிய  எழுத்தாளன். 

கல்முனைப் பிரதேசத்திலிருந்து  1970-1980 காலப் பகுதிக்குள் எழுத்துலகிற்கு வந்தவர்களில் ,ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைப் போக்கில்  நாவல்கள் மூன்றைத் தந்திருப்பவராக இலக்கிய உலகில் அடையாளம் பெற்றிருப்பவர்,தனது படைப்புகளுக்காக நாடு கடந்தும் பலபரிசுகளை வென்றவராகப் பெயர் பதித்திருப்பவர்,  கவிதைச் சிற்றிதழொன்றைப்    புகவம் வெளியீடாக தந்ததன் மூலம்   குறும்பா ,ஹைக்கூ போன்ற  கவிதையின் புது வடிவங்களை  எண்பதுகளில் இருந்தே இளைய தலைமுறைப் படைப்பாளர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் என்று  ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்படுபவர் ஆர்எம். நௌசாத். 
  
தீரன் என்ற புனை பெயரிலும் இயங்கும் அவர், புகவம் (புதுமைக் கவிஞர் வட்டம்) என்ற அமைப்பின் செயலாளராகவும், அபாபீல்கள் கவிதை வட்டத்தின் செயற்பாட்டு முதல்வராகவும்  கலை இலக்கியப் பணிபுரிபவர்.

அவருடைய படைப்புக்கள்  வாசகர்களாலும் விமர்சகர்களாலும் விதந்துரைக்கப் பட்டிருக்கின்றன.
 

" கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கைக் கையாள்வதில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தி யிருக்கிறார்.நாவலுக்கு இந்த மொழி ஒரு புதிய வலுவைக் கொடுக்கிறது. சமூகக் கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த பார்வையைத் தராவிட்டாலும் ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தை தமிழ் நாவலுக்கு அறிமுகப் படுத்துவதன் மூலம் தன்முக்கியத்துவத்தை இந் நாவல் நிலை நாட்டிக் கொள்கிறது" என்று 'நட்டுமை' என்ற நூலுக்கு வழங்கியுள்ள  அணிந்துரையில் பேராசிரியர் எம். ஏ. நுஃமானும்

"வெளிப்பாட்டுத் திறன் மிக்க கதைஞர்..கலைத்துவம் கொண்டவர்.கதைகளின் கலாசாரப் பின்புலத்தை நன்கு கொண்டுவருபவர்" என்று ஈழத்தின்
 பிரபலம் பெற்ற கதை சொல்லி திக்குவல்லைக் கமாலும்,
 
"தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன் ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர்" என்று இலக்கியத் திறனாய்வாளர் ஜிப்ரி ஹாசனும்,..

"தீரன் நெளசாத் நமது சிறுகதையை உயிர்ப்பான திசைக்கு மாற்றிய வல்லவர். அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். காலச்சுவடு மூலம் தமிழக வாசகர் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒரே படைப்பாளி அவரே!" என்று நம் மண்ணின் செய்நேர்த்தி மிக்க  கதைஞர் எஸ் எல் எம் ஹனிபாவும்,

"தமிழுக்குக் கிட்டியதோர் செல்வமே தீரன் 
அமிழ்தினிய ஆக்கங்கள் செய்வான் – உமிகடைந்த 
நெல்லுக் குவப்பாகும் நற்றமிழின் தேறல்கள் 
வல்லவன் வாழிபல் லாண்டு!" என்று காப்பியக் கோ ஜின்னா ஷரிபுத்தீனும் ,

"தீரன் எம்மிடையே வாழும் தீராத கதைசொல்லி. அநாயாசமாய் கதைசொல்லும் தீரனின் கதைகளில் உள்ளுறையாய் ஔிந்திருக்கும் அங்கதம் நம்மை வாழ்வின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இழுத்துச் செல்லும்".என்று விரிவுரையளர் எம் அப்துல் றசாக்கும்  குறிப்பிடுவர்.
 
இலக்கிய உலகில் வரவேற்புப் பெற்ற சிறந்த  நூல்களையும், சஞ்சிகைகளையும்,இறுவெட்டுக்களையும் வெளியீடு செய்திருப்பவர்   அவர்.

1. தூது- கவியேடு - 1983

கையடக்கக் கவிதைச் சிற்றேடு
16 இதழ்கள். கல்முனைப் புகவம் வெளியீடு

2. வல்லமை தாராயோ - சிறுகதைத் தொகுதி - 2000
கல்முனை புகவம் வெளியீடு

3. நட்டுமை - நாவல் - 2009
காலச்சுவடு வெளியீடு

4. வெள்ளிவிரல் - சிறுகதைத் தொகுதி-
காலச்சுவடு வெளியீடு

5. கொல்வதெழுதுதல் 90 - நாவல் - 2013
(2013க்கான தமிழ்நாடு அரசின் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.)
காலச்சுவடு வெளியீடு

6. அபாயா என் கறுப்பு வானம் - கவிதைகள் - மின்நூல் - 2015.
பிரதிலிபி வெளியீடு

7. ஆழித்தாயே அழித்தாயே - சுனாமி காவியம் - 2017
அபாபீல்கள் கவிதா வட்ட வெளியீடு

8. குறு நெல் - குறும்பாக்கள் - 2017
பாவலர் பண்ணை வெளியீடு

9. தீரதம் - சிறுகதைத் தொகுதி - 2017
ஜீவநதி வெளியீடு

10. வக்காத்துக்குளம் - குறுநாவல் - 2021
ஏறாவூர் கசல் பதிப்பக வெளியீடு.

11. முத்திரையிடப்பட்ட மது - கவிதைகள் - 2021 - 
அபாபீல்கள் கவிதா வட்ட வெளியீடு.

 பத்தித் தொடர்கள்

• வானவில்லே ஒரு கவிதை கேளு - குறுநாவல் - 2005 - ஈழநாதம் - வார இதழ்

• ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது - பாவலர் பஸீல் காரியப்பரின் படைப்புலகில்
சஞ்சரித்தல் - 2009 - விடிவெள்ளி வார இதழ்.

• விழித்திரையில் விரியும் வெண்திரை-ஆங்கிலத் திரைப்படப் பார்வை - 2009 - நல்லுறவு.

இறுவெட்டு

காகித உறவுகள்.

இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான 12 வானொலி நாடகங்களின் (1987-1989)தொகுப்பு.

 (பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிறுவனமும் தினக்குரல் பத்திரிகையும்  இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 3ஆவது பரிசுபெற்ற காகித உறவுகள்
என்னும் நாடகமும் முஸ்லீம் சேவையில் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பப்படட ஒரு
கிராமத்தின் கவிதை என்ற நாடகமும் உள்ளடங்கியது.)

 இலக்கியப் பணிக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருப்பவர் அவர்.

“தீண்டத்தகாத கரங்கள் ."’ என்ற முதல் சிறுகதை, 1977 இல் மித்திரன் வாரமலர் நடத்திய பாரதி நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது

"நல்லதொரு துரோகம்" என்ற சிறுகதை பேராதனைப் பல்கலைக் கழக சங்கீத நாட்டிய சங்கத்தின் முதற் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றது.

'நட்டுமை' நாவல் 2009 இல் தமிழ்நாடு காலச்சுவடு சுந்தர ராமசாமி 75 பவளவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.[2009]

'வக்காத்துக் குளம்' நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு குறுநாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. 2014

'வெள்ளிவிரல்' சிறுகதைத் தொகுதி 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றது.

'சாகும் தலம்'சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.

'தாய் மொழி' சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது.

அம்பாரை மாவட்டம், சாய்ந்த மருதூரில் ரஸாக் காரியப்பர்-  ஹாஜறா தம்பதியின் மகனாக 1960ல் பிறந்தவர் ஆர். எம்.நௌசாத்.  பாத்திமா றிபாயா அவரின் மனைவி. மூன்று பிள்ளைகளின் தந்தை. அஞ்சல் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

இலக்கிய  வாழ்வில்  45 வருடமாக இயங்கி வருபவர் ஆர்.எம். நௌசாத் . அவருடைய பல படைப்புக்கள் இந்தியப் பதிப்புக்களாக வெளிவந்துள்ளன. அவை மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு பரவலாக்கப்படவேண்டும்.  தேகநலத்தோடு இன்னும் பல்லாண்டு காலம்  அவர் வாழ்ந்து இலக்கியப் பொன்விழா,பவள விழா என்று  தொடர்ந்து விழாக்கள் பல  கண்டு,அவர் மகிழ வேண்டுமென்பதே தமது அவாவாகும்.